மர்ம நபர்கள் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புலிவானந்தல் கிராமத்தில் சின்னதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காசியம்மாள்(85) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்தம்பி இறந்து விட்டதால் மூன்றாவது மகனின் பராமரிப்பில் காசியம்மாள் இருந்துள்ளார். இந்நிலையில் காசியம்மாள் தினமும் மகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு அருகில் இருக்கும் சமுதாய கூடத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சாப்பிட்டுவிட்டு சமுதாய கூடத்தில் தூங்குவதற்காக சென்ற காசியம்மாள் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் அவரது மருமகள்கள் தேவகி, குமாரி ஆகியோர் அங்கு சென்று பார்த்த போது கழுத்தில் ரத்த காயத்துடன் காசியம்மாள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் அணிந்திருந்த தங்க கம்மல், ரொக்க பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. நகைக்காக ஆசைப்பட்டு மர்ம நபர்கள் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.