சென்னை பூக்கடை பஜாரில் சமூக இடைவெளியை பின்பற்ற யாபாரிகள் குடை வழங்கியது பாராட்டை பெற்றுவருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து கொண்டிருக்கிறது. பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஆறாவது கட்ட ஊரடங்கு வருகின்ற 31ம் தேதி வரை அமலில் இருக்கிறது. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாத நிலையிலும், சென்னை பூக்கடை பஜாரில் இருக்கின்ற பத்திரியன் தெருவில் இயங்கிக் கொண்டிருக்கின்ற சில்லரை வியாபாரிகள் சென்ற நான்கு மாதங்களுக்கும் மேலாக கடைகள் திறக்கப்படாமல் இருந்தனர். அதற்கு சமூக இடைவெளி பின்பற்றுவது கடினமாக இருப்பது முக்கிய காரணமாக இருந்தது.
இதனால் அங்கு பூக்கடை நடத்தி வந்த 120 வியாபாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வந்தன. பூக்கடை வியாபாரிகளின் நலச் சங்கம் சார்பாக பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டன. இருந்தாலும் கடைகளைத் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பூக்கடை வியாபாரிகள் தாங்கள் என்ன கூறுகிறிர்களோ அதை நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினர். இதனைத் தொடர்ந்து பூ கடைகளை திறப்பதற்கு நேற்று அனுமதி அளித்தனர். பின்னர் சமூக இடைவெளியை கடை பிடிப்பதற்காக பூக்கடை பஜார் சில்லரை வியாபாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில் பஜாருக்கு வரும் மக்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான முறையில் குடைகளை வழங்கி அசத்தினார். அதற்காக ஆயிரம் குடைகளை வாங்கியது மட்டுமல்லாமல், தெருவின் இருபுறங்களிலும் 10 காவலாளிகளை பணிக்கு நிறுத்தி குடைகளை கொடுத்து தெருவுக்குள் அனுமதித்துவிட்டு பூக்களை வாங்கிய பின் வெளியே வரும்போது குடைகளை வாங்கிக்கொண்டு அனுப்பினார்கள். இத்தகைய செயலை அங்கு பூக்கள் வாங்க வந்த அனைவரும் பாராட்டிச் சென்றார்கள்.