செங்கல்பட்டு மாவட்டம் கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகருக்கு 2022ஆம் வருடம் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரால் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருது பெற விரும்பும் சமூகசேவகர் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 வருடங்கள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவராகவும், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை , மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் விதமாக தொடர்ந்து பணிபுரிந்து வருபவராகவும் இருத்தல் வேண்டும். அத்துடன் சமூகசேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவைபுரியும் நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.
இவ்விருதை பெறுவதற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தகுதியான சமூகசேவை நிறுவனம் மற்றும் சமூகசேவை புரிந்து வரும் சமூக சேவகர்களாக இருத்தல் வேண்டும். ஆகவே https://awards.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் நகலுடன் செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொட ர்புகொண்டு விருதுக்கான விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் சமூகசேவகர் இருப்பிடத்தின் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலிருந்து பெற்ற குற்றவியல் நடவடிக்கை என்பதற்கான சான்று மற்றும் சேவை குறித்த ஆவணங்களை புகைப்படத்துடன் தமிழ், ஆங்கில மொழிகளில் தனித்தனியாக பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் விண்ணப்பத்தை இந்த மாதம் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநலஅலுவலகம், குறுவள மையகட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகம், 85 ஆலப்பாக்கம், செங்கல்பட்டு – 603 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.