சமையல் செய்து கொண்டிருந்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல்கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள எட்டிக்கம்பாளையம் செல்வந்தர் நகரில் காமாட்சி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூதாட்டி தனது வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலை மீது தீ பிடித்து உடல் முழுவதும் பரவியுள்ளது.
இதனையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காமாட்சியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து மருத்துவர்கள் காமாட்சியை மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.