கிராமங்களில் பின்பற்றப்படும் சமையல் குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம்
1. துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய் கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
2. எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி போன்ற சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து, பின்பு தயார் செய்தால் சாதம் உதிரி உதிரியாகவும், சுவையாகவும் இருக்கும்.
3. உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருப்பதற்கு, சிறிது உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
4. வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.
5. தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு, மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
6. பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக, ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு, மிருதுவாகவும் இருக்கும்.
7. பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு தன்மை நீங்கி விடும்.
8. இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை சேர்த்து தயார் செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
9. தோசை மாவு, பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.
10. ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்று இருக்கும்.
11. உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று இருக்கும்.
12. கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.
13. தேங்காய்துருவல் மீதி ஆனால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால், மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
14. சர்க்கரை பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
15. வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது, வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்தால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
16. ஜாடியில் ஊறுகாய் போடும் முன்பு, கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்து எடுத்து பின்பு ஊறுகாய் போட்டு மூடினால் ஊறுகாய் பூரணம் பிடிக்கமால் இருக்கும்.
17. மைசூர்பா செய்வதற்கு கடலைமாவை டால்டாவில் கரைத்து, பின்பு சர்க்கரை பாகில் கிளறினால் கெட்டியாகாமல் இருக்கும்.
18. அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் தாது உப்புகளும், விட்டமின்களும் நிறைந்திருக்கும்.
19. வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், காய்ச்சல் வரவே வராது.
20. பால் புளிக்காமல் இருப்பதற்கு ஏலக்காயை பால் காய்ச்சும் பொழுது அதோடு சேர்க்கவும் இவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.