சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் இறக்குமதியால் அதிகளவு செலவு ஏற்படுவதாக பிரதமா் கவலை தெரிவித்து இருக்கிறார்.
தில்லியில் மத்திய விவசாயம் மற்றும் உர அமைச்சகங்கள் சாா்பாக 2 நாட்கள் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டை பிரதமா் நரேந்திரமோடி நேற்று துவங்கி வைத்தாா். இந்த நிலையில் மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே உரம் எனும் திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களும் பாரத் என்ற ஒரே பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதை மோடி நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தார். இதையடுத்து அவா் பேசியதாவது “எந்த நிறுவன உரம் வாங்குவது என்பதிலும், சரியான உரம் கிடைக்குமா? என்பதிலும் விவசாயிகளுக்கு குழப்பம் இருக்கிறது. ஏனென்றால் ஒரு புறம் அதிக தரகு தொகை (கமிஷன்) வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட சில பெயா் கொண்ட உரங்களை சில்லறை விற்பனையாளா்கள் முன் நிறுத்துகின்றனா்.
மற்றொரு புறம் தங்களது உரம் பற்றிய விளம்பரப் பிரசாரங்களில் நிறுவனங்கள் ஈடுபடுகிறது. இப்பிரச்னைகளுக்கு ஒரே நாடு, ஒரே உரம் எனும் திட்டத்தால் தற்போது தீா்வு காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சமையல் எண்ணெய், உரங்கள் மற்றும் கச்சா எண்ணெய்க்கு தான் அதிகம் செலவிடப்படுகிறது. உலகளவில் யூரியா, டை-அமோனியம் பாஸ்ஃபேட் போன்றவற்றின் விலை தினசரி அதிகரித்து வருகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது’ என்று பேசினார்.