அரசு மருத்துவமனை பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளியாநல்லூர் பகுதியில் மாவடியான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி(41) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்தபோது மாவடியான் இறந்துவிட்டார். இதனால் வாரிசு அடிப்படையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மகேஸ்வரிக்கு சமையல் கூடத்தில் பணி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மகேஸ்வரி நோயாளிகளுக்கு சமைத்த உணவுகளை வழங்கியுள்ளார்.
அதன் பிறகு சமையல் கூடத்தில் திடீரென மகேஸ்வரி மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவிற்கு தூக்கி சென்றனர். இதனை அடுத்து மருத்துவர்கள் மகேஸ்வரியை பரிசோதித்து பார்த்த ரத்தகொதிப்பு காரணமாக மகேஸ்வரி மயங்கி விழுந்தது தெரியவந்துள்ளது. அதன்பிறகு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மகேஸ்வரி பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து அறிந்த மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள், சக ஊழியர்கள் இணைந்து மகேஸ்வரியின் மகன்களில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை டீன் வனிதாவிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.