ஓசூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பிரேமா. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது குளியலறையில் உள்ள ஜன்னல் வழியாக பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேமா கத்தி சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.
இதையடுத்து பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு பாம்பு பிடி வீரர்கள் விரைந்து வந்துள்ளனர். அதன்பின் பாம்பு பிடி வீரர்கள், எலியை வாயில் கவ்வியபடி பாம்பு நகர முடியாமல் இருந்த நிலையில், அதை லாவகமாக பிடித்து கையில் தூக்கினார்கள். அதன் பின் அந்த பாம்பை சாக்குப்பையில் போட்டு ஓசூர் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.