வட மாநில தொழிலாளி தண்ணீர் குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த செந்துகுமார் ராவத்(32) என்பவர் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதியில் செந்துகுமார் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சம்பளத்தை வாங்கி கொண்டு விடுதியை விட்டு வெளியே சென்ற குமார் மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து குடிபோதையில் வந்த வாலிபர் பெருந்துறை- சென்னிமலை சாலையோரம் இருக்கும் தண்ணீர் குழிக்குள் தவறி விழுந்தார்.
இதனை பார்த்த பொதுமக்கள் வாலிபரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செந்துகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு ரோதிகுமாரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.