வேலை செய்ததுக்கு சம்பளம் கேட்ட பெண் ஊழியரை நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த கொடூரம் அரேங்கேறியுள்ளது.
நிகிதா என்ற பெண் டெல்லியில் உள்ள கிர்கி எக்ஸ்டென்சன் பகுதியில் ஆயுர்வேத ஸ்பா சென்டர் வைத்துள்ளார். இந்த சென்டரில் சப்னா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார், இவர் ஊரடங்கு தொடங்குவதற்கு முன் தான் வேலை செய்த சம்பளத்தை கேட்டதற்கு நிகிதா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ள நிலையில் நிகிதா தனது வளர்ப்பு நாயை அவிழ்த்து விட்டு சப்னாவை கடிக்க வைத்துள்ளார். இதனால் சப்னாவின் முகத்தில் 15 தையல்கள் போடப்பட்டு, 2 பற்களும் இல்லாமல் உடைந்து போயின.
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சப்னா, ஜுன் 11-ல் டெல்லி போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், புகார் கொடுத்தும் போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதற்கிடையில் நிகிதா தலைமறைவாகியுள்ளார். சில தன்னார்வ அமைப்புகள் இதில் சற்று அழுத்தத்தை கொடுத்ததால், 20 நாட்களுக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவான நிகிதா நேற்று கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. தற்பொழுது நிகிதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.