துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கனபாளையம் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஒடுகத்தூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலி, அமுதா என்ற இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இதில் அஞ்சலிக்கு ஒரு மகனும், அமுதாவிற்கு மூன்று மகன்களும் இருக்கின்றனர். கடந்த 2 மாதமாக துப்புரவு பணியாளர்கள் யாருக்கும் சம்பளம் போடவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவிந்தசாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒடுகத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பை கவனித்து வரும் திருவலம் பேரூராட்சி செயல் அலுவலர் துப்புரவு பணியாளர்களுக்கு சேர வேண்டிய 2 மாத சம்பளத்தை கடந்த வாரம் செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சம்பளத்தை பெற்றுக் கொண்ட கோவிந்தசாமி வீட்டில் சம்பளத்தை கொடுக்காததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தசாமி திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
நேற்று காலை குப்பை கொட்டுவதற்காக அங்கு சென்ற துப்புரவு பணியாளர்கள் கோவிந்தசாமி சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கோவிந்தசாமியின் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.