நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல அகண்ட ராவ் சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,62,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதனால் நெற் பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான் மற்றும் இலை சுருட்டு போன்றவற்றின் தாக்குதல் காணப்படுகிறது. இலை சுருட்டு புழுக்கள் என்பது இலைகளை நீளவாக்கில் மடக்கிக் கொண்டு அவற்றில் உள்ள பச்சயத்தை சுரண்டி திண்பதால் இலைகள் வெள்ளையாக மாறிவிடுகிறது.
இதன் தாக்குதல் அதிகரிக்கும் போது, நெல் வயல் முழுவதுமே வெள்ளை நிறமாக மாறி காய்ந்தது போல் காட்சியளிக்கின்றது. இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு வெவேரியா பேசியா ஒரு கிலோ அல்லது குளோரிபைரிபாஸ் 500 மில்லி லிட்டர் அல்லது தயோ தையோமீத்தாக்சம் 40 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 400 கிராம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலமாக கட்டுப்படுத்த முடியும். அதேபோல் தண்டு துளைப்பான் தாக்குதலால் நெற்பயிரின் நடுகுருத்து வாடி காய்ந்து விடும்.
கதிர் பிடிக்கும் தருணத்தில் இதனுடைய தாக்குதல் காணப்பட்டால் நெல்மணிகள் பால் பிடிக்காமல் வெண் கதிர்களாக மாறி மகசூல் பாதிக்கப்படுகிறது. நாற்றுகளை நெருக்கமாக நடுவதை தவிர்ப்பதன் மூலமாக இதை கட்டுப்படுத்த முடிகிறது. மேலும் இதற்கு தேவையான அளவு யூரியாவை 3 அல்லது 4 முறை பிரித்து இடவேண்டும். இதன் தாக்குதல் பொருளாதார சேத நிலையை தாண்டும் போது ஏக்கருக்கு அசாட்ராக்டின் 400 மில்லி அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 400 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலமாக இதனை கட்டுப்படுத்த முடியும்.
இதனையடுத்து புகையான் தாக்குதல் காரணமாக நெற்பயிர்கள் வட்ட வடிவில் திட்டு திட்டாக காய்ந்து தீர்ந்தது போல காணப்படுகிறது. அதாவது தலைச்சத்து அதிகமாக இடப்பட்ட வயல்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதும். இதன் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு யூரியா போன்ற தலைசத்து உரங்களை மேலுரமாக இடும்போது பிரித்து இடவேண்டும். இதன் தாக்குதல் அதிகரிக்கும்போது ஏக்கருக்கு குளோரி பைரிபாஸ் 500 மில்லி லிட்டர் அல்லது தையோமீத்தாக்சம் 40 கிராம் மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேலைகளில் தெளிப்பதன் மூலமாக கட்டுப்படுத்தமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.