திண்டுக்கல்லில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் வேன் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வந்தார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் மதுரைக்கு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் உணவகத்திற்கு சொந்தமான சரக்கு வேனை ஓட்டி சென்றுள்ளார். இவருடன் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் ஜாய்சிங் என்பவரும் வேனில் சென்றுள்ளார். அப்போது வேன் திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக வேன் மீது வேகமாக மோதியுள்ளது. இதையடுத்து அந்த வேனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காரும் மோதியது. இதனால் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர் கிருஷ்ணகுமார் மோசமான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உடன் வந்த ஜாய்சிங், காரில் வந்த சீலப்பாடி பகுதியை சேர்ந்த ஆண்டவர், செட்டிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டிப்பர் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் விபத்திற்கு காரணமான லாரி டிரைவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.