யானைகள் சரக்கு வேனை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் சரக்கு வேனை வழிமறித்து கரும்புகள் இருக்கிறதா என பார்த்துள்ளது. அப்போது கரும்புகள் இல்லாததால் ஆவேசத்துடன் யானைகள் வேனை அடித்து நொறுக்கியது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக வானத்தில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பிவிட்டார். இதனை அடுத்து யானைகள் வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதோடு, சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை தின்றது. பின்னர் ஒரு மணிநேரம் சாலையில் உலா வந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் ஓட்டுநர் அச்சத்துடன் அந்த வாகனத்தை அங்கிருந்து ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.