சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர்வேல்(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் எடுத்து வரும் சரக்கு வேனில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கமாக கதிர்வேல் கருமாண்டம்பாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு சென்று தனியார் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து மொடக்குறிச்சி பகுதியில் வினியோகம் செய்து வந்துள்ளார். நேற்று அதிகாலை சரக்கு வேனில் கதிர்வேல் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் சோலார் புதூர் அருகே சென்ற போது சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரி ஓட்டுனரான வீரபத்திரன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதிர்வேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.