சரக்கு வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு வேன் ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை ஹரிஷ்குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கிளீனரான மஞ்சுநாத் என்பவர் உடன் இருந்துள்ளார். அதே சமயம் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கருணாகரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை கோம்பூர் பள்ளம் அருகே சென்று கொண்டிருந்த போது கருணாகரன் ஓட்டி வந்த லாரியும், ஹரிஷ்குமார் ஓட்டி வந்த சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மஞ்சுநாத், ஹரிஷ் குமார் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கருணாகரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹரிஷ் குமார் மற்றும் மஞ்சுநாத் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.