சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து(23) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ்(24) என்பவரும் சென்னை- சேலம் இடையே இயக்கப்படும் தினசரி பார்சல் சர்வீஸ் சரக்கு வானில் டிரைவர் மற்றும் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் துலுக்கனூர் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது சரக்கு வேன் பஞ்சரானது. இதனால் சாலையோரம் வேனை நிறுத்திவிட்டு மாரிமுத்துவும், காளிதாசும் டயரை மாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது சேலம் நோக்கி ப்ளைவுட் ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக சரக்கு வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காளிதாஸ், மாரிமுத்து ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.