இலையூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சரியான நேரத்தில் வழங்கப்படாததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப்பள்ளியில் சுமார் 400- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கபட்டு வருகிறது. இந்த மதிய உணவு மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படாமல் மற்றும் தட்டுப்பாட்டுடன் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றன. இதையடுத்து மாணவர்கள் புகார் கொடுத்தும் பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரியப்படுகிறது.
இதே போல் நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மதிய உணவு சாப்பாட்டிற்கு சென்றனர். அப்போது மாணவர்களுக்கு உரிய நேரத்தில் மதிய உணவு வழங்கப்படாத காரணத்தால் பள்ளி முன்பு இருக்கும் ஜெயங்கொண்டம் -செந்துறை சாலையில் இலையூர் பேருந்து நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் சமாதனம் செய்த பிறகு பள்ளி உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கு வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு மற்றும் முட்டைகளை வழங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இவ்வாறு கோரிக்கை வைத்த பின்பு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளித்த பிறகு பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்- செந்துறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.