பேருந்தை சரியான நேரத்தில் இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுபீர்கடவு கிராமத்தில் வசிக்கும் மாணவ மாணவிகள் தொட்டம்பாளையம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் பயணம் செய்வதற்காக கிராமத்தின் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் உரிய நேரத்தில் பள்ளி கூடத்திற்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல் சுந்தரம் தலைமையில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புதுபீர்கடவு கிராமத்திலிருந்து பண்ணாரி செல்லும் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.