திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மை சான்றிதழ் பெரும் நடைமுறைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி தடை விதித்துள்ளார்.
பிரான்சில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் ஒன்றில் பேசிய மேக்ரான், ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மை சான்றிதழ் பெற அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். பல நாடுகளில் இந்த கன்னித்தன்மை சோதனையை நடைமுறைக்கு கொண்டு வந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு இது தனிமனித மீறல் என்றும் இவ்வாறு சோதனை செய்வதால் அப்பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பரிசோதனையின் மூலம் ஒரு பெண் கன்னித்தன்மையோடு இருக்கிறாளா? இல்லையா? என்பதை நிரூபிக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது,
இதையடுத்து அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தில், கன்னித்தன்மை பரிசோதனைக்கு தடைவிதிப்பது குறித்த மசோதா முன் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்த பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கு 1 வருட ஜெயில் தண்டனையும், 15 யூரோக்கள் அபராதமும் விதிக்க திட்டம் வகுக்கப்பட உள்ளது. இந்நிலையில் பிரான்சில் மருத்துவர்களும், இஸ்லாமிய பெண்ணியவாதிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இந்த தடை விதிப்பு பெண்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் வாதிட்டுள்ளனர்.
இது குறித்து பெண்ணியவாதி Nta Rajel கூறுகையில், “சில சமுதாய பெண்கள் கன்னித்தன்மை சான்றிதழ் அளிக்கப்படாத நிலையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அப்போது இந்த கன்னித்தன்மை பரிசோதனை சான்றிதழ் உதவியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.