நடிகை சாய் பல்லவி அண்மையில் அளித்த பேட்டியில் பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரட்ட பர்வம் என்ற தெலுங்கு திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அது குறித்து விளக்கம் அளித்து சாய்பல்லவி தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, அண்மையில் நான் கலந்துகொண்ட நேர்காணலில் இடதுசாரியா?வலதுசாரியா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் நடுநிலையில் நம்பிக்கை இருக்கின்றது. நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் எனக் கூறினேன். அதில் காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கும்பல் படுகொலை உள்ளிட்ட இரண்டு விஷயங்கள் பற்றி நான் பேசினேன். காஷ்மீர் பைல்ஸ் இயக்குனருடன் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது. மூன்று மாதங்களுக்கு முன்பாக காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை பார்த்து மனதளவில் பாதிக்கப்பட்ட இயக்குனரிடம் கூறினேன்.
மேலும் கொரோனா ஊரடங்கின்போது கும்பல் படுகொலை வீடியோவை பார்த்து அதிர்ச்சியுற்றேன். மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் எந்த வன்முறையும் தவறுதான். சிலர் கும்பல் படுகொலைகளை நியாயப்படுத்துவது அதியளிக்கின்றது. யாருடைய உயிரையும் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒரு மருத்துவராக அனைத்து உயிரும் சமம் என எண்ணுகிறேன். அடையாளத்தின் பெயரால் யாரும் யாரையும் பார்த்து பயப்பட கூடாது.
https://www.instagram.com/saipallavi.senthamarai/?utm_source=ig_embed&ig_rid=da79e3cf-5c10-4b14-8a19-504a48e1ae8b
பள்ளி படிக்கும்போதே அனைத்து இந்தியர்களும் எனது சகோதர சகோதரிகள் என உறுதிமொழி எடுத்து இருக்கின்றேன். அது என் மனதில் பதிந்து இருக்கின்றது. நான் எப்பொழுதும் நடுநிலையாக இருக்க நினைக்கின்றேன். நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டார்கள். முக்கிய நபர்கள் இணையதளங்கள் எனது முழு பேட்டியை கேட்காமல் அதன் ஒரு பகுதியை மட்டுமே பார்த்துவிட்டு பதிவிட்டு இருக்கின்றனர். நான் சொன்னதன் உண்மை அர்த்தத்தை அவர்கள் ஆராயவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என சிந்தித்துக்கொண்டே இருந்தேன். தனிமையாக உணர்ந்தேன். எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என அவர் அதில் பேசியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.