உணவுகள் தரமானதாக இருக்கின்றதா? செயற்கை கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா? என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை சார்பாக சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிபேட்டை, அண்ணாநகர், எழும்பூர் பகுதிகளில் இருக்கின்ற ஹோட்டல்கள், கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் நியமன அதிகாரி பி.சதீஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் என்.ராஜா, ஜெயகோபால், கண்ணன் உள்ளடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டார்கள்.
அப்போது ஹோட்டல்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தரமானதாக இருக்கிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் ஓட்டல் ஊழியர்களுக்கு சந்தைகளிலிருந்து கொண்டு வரும் பொருட்களில் கலப்படத்தை எப்படி கண்டறிவது என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர். மிளகில் கலந்து வரும் பப்பாளி விதை, தேனில் கலக்கப்படும் வெல்லப்பாகு, டீ தூளில் கலந்து வரும் மரத்தூள் என கலப்படத்தைக் கண்டுபிடிப்பது குறித்து செயல்முறை விளக்கமும் காண்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட எண்ணையை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பயோடீசல் பயன்பாட்டிற்கு அளிக்கும் நடைமுறை குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேசியதாவது, செயற்கை கலப்படம் செய்வது தவறு. உணவு தரம் இல்லாமல், கலப்பட பொருட்கள் விற்பனை குறித்து 9444042322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். இப்புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நடத்திய 2021- 2022ஆம் வருடகால செயல்பாட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது. அதே போன்று தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, சென்னை, சேலம், கோவை, ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூர், நெல்லை, திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை பெற்றது குறிப்பிடபட்டுள்ளது.