பெரம்பலூர் அருகே சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு துறை மங்கலத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் கலையரசி தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாரியம்மாள், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கீதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளையும், பாலியல் வன்முறைகளையும் தடுத்து நிறுத்திட வேண்டும். அரசு வழங்கிய 4 சதவீத வட்டி விகிதத்தில் சுய உதவி குழு பெண்களுக்கு கடன் வழங்க வேண்டும்.
வங்கிகளில் தனி கவுண்டர்கள் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அமைக்கவேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கருத்தரங்கத்தில் விவாதம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேர்தல் கோரிக்கை கருத்தரங்கத்தில் வெளியிடப்பட்டது. இறுதியில் குன்னம் ஒன்றிய செயலாளர் சின்னப்பொன்னு நன்றியுரை கூறினார்.