நியாய விலைக்கடைகளில் 3 நாட்களாக பொருட்கள் வழங்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 735 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய், அரிசி போன்ற பல்வேறு பொருட்கள் மலிவு விலையில் இங்கு வழங்கப்படுகிறது. போலியான குடும்ப அட்டைகளை கண்டறிவதற்காக அரசாங்கம் ஆதார் அட்டையுடன், குடும்ப அட்டையை இணைத்துள்ளது. இந்நிலையில் இணையதளத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறின் காரணமாக 3 நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மாவட்டம் முழுவதும் வழங்கப்படாமல் இருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நியாயவிலை கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நியாயவிலை கடையில் ஏற்பட்டுள்ள சர்வர் கோளாறை சரிசெய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் பழைய முறையில் பொருள்களை வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.