அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் எடப்பாடிக்கு பாதகமான தீர்ப்பு வந்துள்ளதை ஓபிஎஸ் அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீசெல்வம்,
கழகத்தினுடைய நிறுவனத் தலைவர் பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலமெல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், பண்பும், பாசமும், பற்றும், பரிவும் கொண்டு, நல்லாட்சி நடத்திய நம்முடைய இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இரு மாபெரும் தலைவர்கள் ஆன்மாக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றை கோடி தொண்டர்களாகிய எங்களுடைய வணக்கத்தை இந்த நல்ல நேரத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.
இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தொண்டர்கள் இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார்கள். புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் உருவாக்கினார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பத்தாண்டு காலமும், அம்மா அவர்கள் 16 ஆண்டு காலமும் நல்லாட்சியை தமிழக மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அசாதாரணமான சூழலில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், டெல்லி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் மீறி பொதுக்குழு என்ற பெயரிலே நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த தீர்மானங்களும் செல்லாது என்றும், 23.06.2022 என்ன நிலைமையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அது அப்படியே நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு வழங்கி இருக்கிறது.
இந்த தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒன்றை கோடி தொண்டர்களுக்கு நாங்கள் காணிக்கையாக அளிக்கிறோம். தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ, அது இன்றைக்கு நடந்திருக்கிறது. ஏன் என்று சொன்னால்… இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கம், தொண்டர்கள் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது.
யார் சர்வாதிகாரத்தின் ஒரு தனிநபர், தனிநபருக்கு குழு இருக்கிறதோ அல்லது ஒரு குடும்பத்திற்கோ இந்த இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தால் அதுவும் நடக்காது என்பது தான் இன்றைக்கு இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது. இந்த தீர்ப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்திருக்கிறது என்பதை நான் பணிவோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன் என தெரிவித்தார்.