பெண் காவலருக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ண ரேகா ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் நெதர்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கான தடகள போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், உயரம் தாண்டுதலில் கிருஷ்ணரேகா வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார்.
இதன் காரணமாக கிருஷ்ணரேகாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில், குமரி மாவட்ட டி.எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் கிருஷ்ணரேகாவை செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகள போட்டியில் கிருஷ்ண ரேகா கலந்து கொண்டு தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நடப்பாண்டில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர்களுக்கான தேசிய மற்றும் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிவற்றில் கிருஷ்ணரேகா வெற்றி பெற்று தங்கம் வென்றார்.