திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று பிரையண்ட் பூங்காவுக்கு 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக புகுந்ததை பார்த்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தனர்.
இந்நிலையில் பூங்காவின் சுற்றுச்சுவர் சேதமடைந்து இருப்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில் சாதாரணமாக காட்டெருமைகள் உள்ளே வருகிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு காட்டெருமைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.