ஆஸிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ், கே.எல் ராகுல் முன்னேற்றம் கண்டுள்ளனர்..
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சே காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.. இந்திய தோல்வி அடைந்திருந்தாலும் இந்திய பேட்டர்கள் சிறப்பாகவே ஆடி இருந்தனர். ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார்.. மேலும் சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 46 ரன்களும், கே.எல் ராகுல் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடி இருந்தனர்.
இந்நிலையில் ஐசிசி ஆண்களுக்கான டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 780 ரேட்டிங் புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 825 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து நீடிக்கிறார்.. 2ஆவது இடத்தில் தென்ஆப்பிரிக்க அணியின் வீரர் எய்டன் மார்க்ரம் இருக்கிறார். கே.எல் ராகுல் 5 இடங்கள் முன்னேறி 18ஆவது இடத்திற்கு வந்துள்ளார். ரோகித் சர்மா 14 வது இடத்திலும், விராட் கோலி 16 வது இடத்திலும் இருக்கின்றனர்.
அதேபோல டி20 ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முன்னேறி முதல் 5 இடத்திற்குள் வந்துள்ளார். ஹர்திக் 180 ரேட்டிங் புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் வங்கதேச அணியின் சாகிப் அல் ஹசனும், 2ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபியும், 3ஆவது இடத்தில் இங்கிலாந்தின் மொயின் அலியும் இருக்கின்றனர்..