தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது.
பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படாமல் பொதுத்தேர்வு கருதி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமன்றி மாணவர்களின் நலனை கருதி பொதுத்தேர்வை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி தேர்வை நடத்தினால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதால் தேர்வை ஒத்தி வைப்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.