வன்முறை நிகழ்ந்த கனியாமூர் பள்ளியை இயக்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடர்ந்து நான்கு நாட்களாக மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் மாணவர் அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் அனைவரும் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.
இதனால் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி சின்னசேலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று சென்னை முகப்பேரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பள்ளி வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி என்ன செய்யலாம் என ஒரு வாரத்தில் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறை நிகழ்ந்த கனியாமூர் பள்ளியை இயக்குவது தொடர்பாக அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
சூறையாடப்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ்களை தாமதம் இன்றி வழங்க அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் டிஐஜி பிரவீன் குமார் அபினவ் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.