திருவாரூர் மாவட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது.
கடந்த 3 தினங்களாக கோவை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மூன்று நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறிப்பாக பாஜக நபர்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் அவர்களுடைய அலுவலகங்கள், இந்து முன்னணியின் இடங்கள் ஆர்.எஸ்.எஸ் இடங்களில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு என்பது நடந்து வருகிறது. அதே போல கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருவாரூர் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து பேருந்துகளில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் போலீசார் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..
திருவாரூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளன.. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. அதாவது பெட்ரோல் பங்குகளில் வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல் அல்லது டீசல் ஏதேனும் கேட்டால் அவர்களுக்கு வழங்கக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் வாட்டர் பாட்டில்களில் யாரேனும் பெட்ரோல் கேட்டால் கொடுக்க முடியாது என தெரிவித்து வருகிறார்கள்..
இதேபோன்று 67 பாஜக பிரமுகர்களின் அலுவலகங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 230 ரோந்து வாகனங்களில் மாவட்டம் முழுவதும் போலீசார் பயணித்து வருகின்றனர்.. குறிப்பாக எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், அனைத்து பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..