கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் சித்தேரிக்குப்பம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களை இறுதிசடங்குகள் முடிவடைந்த பின் அப்பகுதியிலுள்ள ஏரியை தாண்டி சுடுகாட்டில் புதைப்பது வழக்கம் ஆகும். அவ்வாறு இறந்தவர்களின் உடலை புதைக்கும்போது ஏரியில் தண்ணீர் தேங்கியிருந்தால் ஆபத்தை உணராமல் படகு வாயிலாகவும், தண்ணீரில் இறங்கி உடலை சுமந்து சென்றும் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ரெங்கநாதன்(75) என்பவர் உடல்நலக் குறைவால் இறந்தார். இதனையடுத்து நேற்று மாலை அவரது உடலுக்கு இறுதிசடங்கு நிகழ்ச்சிகள் முடிந்தது. பின் அவரது உடலை இறுதி ஊர்வலமாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். இதனிடையில் கடந்த சில நாட்களாக விருத்தாசலம் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.
இதன் காரணமாக ஆபத்தை உணராமல் ரங்கநாதனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பாடையுடன் இடுப்பளவு தண்ணீரில் சுமந்துசென்று அடக்கம் செய்தனர். இது போன்று இந்த பகுதி மக்கள் ஆபத்தை உணராமல் சென்று வருவதை அதிகாரிகள் கண்டும், காணாமலும் சென்றுவிடுகின்றனர். மிகப் பெரிய உயிரிழப்புகள் ஏதேனும் நடைபெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சுடுகாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.