சென்னை மாதவரம் பிருந்தா வனம் கார்டனில் வசித்து வருபவர் கோடீஸ்வரன் (32). இவர் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவி யுவஸ்ரீ (24) என்பவருடன் பெரம்பூர் மேல்பட்டி பொன்னையன் தெருவிலுள்ள யுவஸ்ரீயின் தாய் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது எதிரே சவஊர்வலம் வந்ததால் கோடீஸ்வரன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தினார். அந்த சவஊர்வலத்தில் வந்த ஒருவர் கையிலிருந்த மாலையை கோடீஸ்வரனின் மோட்டார்சைக்கிள் மீது போட்டு பூவை தூவினார். இதை கோடீஸ்வரன் தட்டிக் கேட்டார். இதன் காரணமாக சவஊர்வலத்தில் குடிபோதையில் வந்த 10க்கும் அதிகமானோர் கோடீஸ்வரனிடம் தகராறு செய்து, மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி விட்டனர்.
அத்துடன் கோடீஸ்வரனையும், அவருடைய மனைவியையும் தாக்கினர். இதனால் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழேவிழுந்ததில் யுவஸ்ரீக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தற்போது கோடீஸ்வரன் மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்.