மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று சாகசம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடும் நபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் சொக்கிக்குளம் வல்லபாய் ரோட்டில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனை ஒருவர் செல்போன் மற்றும் கேமரா மூலம் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.
உடனடியாக போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது 2 பேர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் என்பதும், மற்றொருவர் தனியார் மருத்துவமனையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. சாகசம் செய்து இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கேமரா, 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.