சென்னை திருவல்லிக் கேணி, தேவராஜ் முதலி தெருவில் சாந்தி (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வியாசர்பாடியில் வசிக்கும் தன் மகள் வீட்டுக்கு மாநகர பேருந்தில் ஏறிச் சென்றார். அப்போது பேருந்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த சிறுவர்கள், சாந்திக்கு சாக்லெட் ஒன்றை சாப்பிட கொடுத்து உள்ளனர். அந்த சாக்லெட்டை சாப்பிட்டவுடன் சாந்திக்கு மயக்கம் ஏற்பட்டு, அப்படியே பேருந்து சீட்டில் சாய்ந்துவிட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த சாந்தி அதிர்ச்சியடைந்தார்.
ஏனெனில் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிசங்கிலி மாயமாகியிருந்தது. பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த சிறுவர்களையும் காணவில்லை. இந்நிலையில் பேருந்து புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் நின்றது. உடனடியாக சாந்தி பேருந்தைவிட்டு இறங்கிவிட்டார். இந்த நிலையில்தான் சாந்திக்கு பேருந்தில் தன் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த சிறுவர்கள் தனக்கு மயக்க சாக்லெட்டை கொடுத்து மயக்கி, தன் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது.
அதன்பின் சாந்தி தன் மகளை வரவழைத்து, அவர் வாயிலாக தங்கசங்கிலி திருட்டு போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையில் பேருந்தில் சாந்தி அமர்ந்திருந்த சீட்டுக்கு பின் சீட்டில் 2 பெண்கள் உட்கார்ந்திருந்ததாகவும், அவர்கள்தான் இதில் குற்றவாளிகளாக இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.