தமிழகத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காரணத்தினாலும்,
வடசென்னை தெற்கு மாவட்டத்தை சார்ந்த நீலகண்டன், காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த ரஞ்சித்குமார், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் முன்னாள் அமைச்சர், விருதுநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த ராமராஜ் பாண்டியன், வேல்முருகன் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.