Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் இரட்டை கொலை – விரிவான உத்தரவுக்கு வழக்கு ஒத்திவைப்பு …!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக விரிவான உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பல கட்ட வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கில் விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடைபெற வேண்டும் தாமதம் கூடாது என்ற அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கு விசாரணையை கையிலெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி காவல் துறையினரும் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் டிஎஸ்பி அனில்குமார் காணொளி வாயிலாக ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடைபெற்றது. தலைமை காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் மற்றும் முத்துராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதே போல பாலகிருஷ்ணன், ஸ்ரீதர், முருகன் ஆகியோரை கோவில்பட்டி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்கள். தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் தலைமைக் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க படவேண்டும், அவரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து 105 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் குற்றவாளிகளை கொண்டு செல்வதில் கடினமான விஷயம். ஆகவே தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்க நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும். அவர்கள் முன்பாகவே குற்றவாளிகளை ஆஜர்படுத்தலாம்  என உறுதி அளித்தனர்.

மேலும் ஏற்கனவே தடயவியல் துறை அதிகாரிகள் தடயங்களை சேகரித்து வைத்துள்ளனர். அவற்றைப் பெற்றுக் கொண்டு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் நேரடியாகவே தேவையான பரிசோதனைக்கு அனுப்பலாம் என்ற அனுமதியையும் டிஎஸ்பிக்கு வழங்கியிருக்கின்றனர். கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணையில் இறுதி அறிக்கையை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்ட  இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை விசாரணைக்கு பின்னர் நீதிமன்றம் சொத்து அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி இந்நடவடிக்கை உள்ளது. அதற்காக வாழ்த்துக்கள் என்ற கருத்தையும் நீதிபதிகள் தெரிவித்தார்கள். இதேபோல கூடுதல் காவல்துறை தலைவர் தாமரைக்கண்ணன் காணொளி வாயிலாக ஆஜராகி காவல்துறையினரின் மன நலத்தை மேம்படுத்தும் விதமாக 100 கோடி மதிப்பில் திட்டம் உள்ளது. அது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாவட்ட அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள், கொரோனாவுக்கு முன்பாகவே காவல்துறையினருக்கு அதிகமாக மனஅழுத்தம் இருந்தது  தெரியவருகிறது. அவ்வாறு இருக்கையில் கொரோனாவுக்கு பின்பான மன நிலை மிகவும் மோசமாக இருக்கும் என்று கவலையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து ஒரு மனிதன் எதற்காக இன்னொரு மனிதனை அடிக்கிறான். விலங்கு நிலையிலிருந்து சமுதாய வாழ்க்கைக்கு வந்து இருக்கும் மனிதன்  இது போன்று நடந்து கொள்வது இயல்பு நிலைக்கு மாறானது. அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்படும். தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் ஒருபோதும் நடக்கக் கூடாது என்பது கருத்தை பதிவு செய்தனர்.

மேலும் 24 மணி நேரத்தில் இந்த வழக்கில் சிறப்பான நடவடிக்கை சிபிசிஐடி எடுத்துள்ளது. இது தமிழக காவல் துறையின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்வது என தெரிவித்த நீதிபதிகள், தலைமைக் காவலர் ரேவதியிடம் தொலைபேசியில் பேசினார். அவரிடம் பேசிய பின்னர் தலைமைக் காவலரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

Categories

Tech |