சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் காவல்துறையினரால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி இம்மாத இறுதிக்குள் சிபிஐ தனது விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. இதனால் வழக்கு விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக 4 அல்லது 5 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு மட்டுமே விசாரணை நடத்தி வந்தது. தற்போது சிபிஐ அதிகாரிகள், தடயவியல் துறை அதிகாரிகள், மற்றும் வருமானத்துறை அதிகாரிகள் என 17 அதிகாரிகள் கொண்ட குழு விசாரணையில் கலம் இறங்கியுள்ளது. இக்குழு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேற்று நான்கு மணிநேரமாக விசாரணை மேற்கொண்டது. வழக்கின் முக்கிய சாட்சியான காவலர் ரேவதி மற்றும் தலைமை காவலர் பியூலா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.