வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி விடுதி கீழப் பட்டியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அருள்முருகனின் மதிப்பெண் சான்றிதழில் தந்தையின் இனிசியல் மாறி இருந்தது. இதனால் கல்லூரி மற்றும் உயர்கல்வி துறை நிர்வாகத்தினரை அருள்முருகன் தொடர்புகொண்டு இனிசியலை மாற்றி கொடுக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.
ஆனாலும் இதுவரை அருள்முருகனின் சான்றிதழில் இனிசியல் மாற்றி கொடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அருள் முருகன் தனது வீட்டில் வைத்து எலி மருந்தை தின்றும், கையில் பிளேடால் அறுத்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருள்முருகனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.