திருமணத்தின் போது மணமகள் வீட்டார் ஆட்டுக்கறி போடாத காரணத்தினால் மணமகன் கோபித்துக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராமகாந்த் பத்ரா என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் திருமணத்திற்காக நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அனைவரும் மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மணமகள் வீட்டார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விருந்தில் ஆட்டுக்கறி இடம்பெறவில்லை என மாப்பிள்ளை வீட்டார் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை அறிந்த மணமகன் கோபித்துக் கொண்டு அங்கிருந்து வேறு ஒரு உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். ஆட்டுக்கறி போடவில்லை என்று கோபம் அடைந்து திருமணம் செய்ய மறுத்துள்ளார். பிறகு அதே இரவில் புல்ஜாராவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணையும் அவர் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பெண் வீட்டார் யாரும் இதுவரை புகார் அளிக்காத காரணத்தினால் வழக்குப்பதிவு செய்யவில்லை. மணப்பெண் தரப்பை சேர்ந்த யாராவது புகார் அளித்தால் நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.