லாரி உரிமையாளர் சங்க வளாகத்தில் நின்று கொண்டிருந்த லாரியை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அடுத்துள்ள காந்திநகரில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். லாரி உரிமையாளரான இவர் லோடு இல்லாத சமயத்தில் தனது லாரியை நாமக்கல் தாலுகாவில் உள்ள லாரி உரிமையாளர் சங்க அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த 14ஆம் தேதி சுப்பிரமணியன் தனது லாரியை, சங்க அலுவலக வளாகத்தில் நிறுத்திவைத்துவிட்டு திருச்சிக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அவருக்கு லோடு எதுவும் கிடைக்காததால் சுப்ரமணியன் நாமக்கல்லுக்கு திரும்பி செல்லவில்லை.
இதனையடுத்து கடந்த 19ஆம் தேதி சுப்பிரமணியன் நாமக்கலுக்கு சென்று லாரியை சுத்தம் செய்துவிட்டு சாவியை லாரியிலே வைத்துவிட்டு சாப்பிடுவதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து 1 மணிநேரத்திற்கு பிறகு வந்து பார்க்கும் போது லாரி திருடு போயிருந்துள்ளது. மேலும் லாரி காணமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் உடனடியாக நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே சுப்பிரமணியனின் லாரி இருந்து உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியை கடந்து செல்வதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த சுப்பிரமணியன் உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் உளுந்தூர்பேட்டை அருகே வைத்து அந்த லாரியை மீட்டுள்ளனர். மேலும் லாரியை திருடிய பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த மாயவன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.