தாபாவில் உணவருந்தி விட்டு துங்கிய தச்சு தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் வசித்து வந்த பூவரசன்(29) என்பவர் தச்சு தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து கடந்த ஒரு ஆண்டாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பூவரசனும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் முனிராஜாவுடன் இணைந்து ஆண்டகளூர் கேட்டில் உள்ள தாபா ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார்.
இதனையடுத்து அவர்கள் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அங்கேயே மது அருந்தியுள்ளனர். அப்போது பூவரசன் மற்றும் முனிராஜா தாபாவிலேயே தூங்கியதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து மறுநாள் காலையில் தாபா ஊழியர் ரங்கநாதன் வந்து முனிராஜா மற்றும் பூவரசனை எழுப்பியுள்ளனர். ஆனால் பூவரசன் எவ்வளவு எழுப்பியும் எழுந்திரிக்கவில்லை.
இதனையடுத்து பூவரசன் உயிரிழந்ததை அறிந்த முனிராஜா உடனடியாக ராசிபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார் பூவரசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் பூவரசன் அதிகம் குடித்ததால் போதை அதிகமாகி உணவு செரிக்காமல் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.