தொழிலதிபரை கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் தொழிலதிபரான சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று சாலமன் தனது நண்பருடன் சேர்ந்து 100 அடி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 மர்ம நபர்கள் சாலமனை தாக்கி காரில் கடத்தி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாலமனின் நண்பர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாலமனை கடத்தியது அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கண்ணன், சுரேஷ், சரவணன், நாராயண மூர்த்தி ஆகிய 4 பேர் என்பதும், இவர்களிடம் சாலமன் பண மோசடி செய்ததால் ஆத்திரமடைந்த இவர்கள் சாலமனை கடத்தியதும் தெரியவந்துள்ளது . இதனையடுத்து காவல்துறையினர் மதுரவாயல் பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாலமனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் சாலமனை கடத்திய 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.