“சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கம்பராயபெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவில் நிலத்தில் வாடகைக்கு குடியிருந்து வருபவர்களுக்கு வாடகை கட்டணத்தை அறநிலையத்துறையினர் பல மடங்காக உயர்த்தியுள்ளனர். இதற்கான நிலுவைத் தொகை மற்றும் வாடகை பாக்கியை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அப்பகுதியில் குடியிருப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான சுருளிவேல் என்பவர் கம்பம் வா.உ.சி நினைவு படிப்பகம் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது “சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி” என்ற தலைப்பில் பாதகையை வைத்து, வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளார்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கம்பம் தெற்கு காவல் துறையினர் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக சுருளிவேலுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு கோவில் நிலத்தில் குடியிருப்பவர்கள் திரண்டு சென்று காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனைதொடர்ந்து சுருளிவேலை விடுதலை செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதற்குப்பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என சுருளிவேலுவை எச்சரித்து விடுத்துள்ளனர். இதற்குப் பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.