மண்ணச்சநல்லூர் அருகே சாமி கும்பிட சென்ற போது அண்ணன் தம்பி மின்சாரம் பாய்ந்து உயர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அத்தாணி அரிசன தெருவை சேர்ந்த அரவன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி மாரிமுத்து(58) இவர்கள் இரண்டு பேரும் விவசாயம் செய்து வருகின்றார்கள். ஆடி அமாவாசை முன்னிட்டு வயல்வெளி பகுதியான அத்தாணி கிராமத்தில் உள்ள கருப்பு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக அரவன், மாரிமுத்து போன்றோர் சென்றுள்ளனர். இந்த நிலையில் கோவில் அருகே அவர்கள் நடந்து சென்ற போது அங்குள்ள மின்கம்பத்தில் இணைப்பு கம்பி அறுந்து கீழே கிடந்திருக்கின்றது. இதனை கவனிக்காமல் சென்று அரவன் கால் கம்பியின் மீது பட்டது.
இதில் மின்சாரம் பாய்ந்து அரவன் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து தனது அண்ணனை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதில் இரண்டு பேரின் அலறல் சத்தத்தையும் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். மேலும் இது பற்றி மண்ணச்சநல்லூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு வந்த மின் ஊழியர்கள் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்துள்ளனர். மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து இரண்டு பேரையும் ஆம்புலன்ஸ் மூலமாக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.