கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் மருதை(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சாந்தி(45) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா(21) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மருதை தனது மனைவி மற்றும் மகளுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் வேடசந்தூர்- ஒட்டன்சத்திரம் சாலை தனியார் பால்பண்ணை அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது.
அதன் மீது மோதாமல் இருப்பதற்காக மருதை சடன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐஸ்வர்யாவின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சாந்தி, மருதை ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு வேடந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.