Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாமி சிலைகளை அகற்றிய நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

சாமி சிலைகள் அகற்றப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதியில் கன்னிமார் கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியில் வசிக்கும் 5 பேருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் சிறிய அளவிலான மேடை அமைத்து, இரும்பு கம்பிகளால் தடுப்பு போடப்பட்டு சுவாமி சிலைகள் வைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பொதுமக்கள் இந்த கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளனர். இந்நிலையில் 5 பேரில் ஒருவருக்கு சொந்தமான நிலம் கோவிலுக்கு நேர் எதிரில் இருக்கிறது.

இதனால் தனது நிலத்தின் மதிப்பு உயரவில்லை என்று கூறி அந்த நபர் கற்களால் ஆன சாமி சிலைகளை அகற்றி புறம்போக்கு இடத்தில் வைத்துள்ளார். அதன் பிறகு இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி, மரங்களை வெட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த பக்தர்கள் சாமி சிலைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அறிந்த இந்து முன்னணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவில் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்வெல் லாரிகளை சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |