இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். எம்ஜிஆர், கமல் ஆகியோர் முயற்சித்து எடுத்து முடியாத இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தற்போது எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கும் அவர் கல்கியின் நாவலை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார். பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் நடிக்கின்றனர். விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குக்கு வர உள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் படுவேகமாக நடந்து வருகின்றது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களை அப்படியே புடவையில் நெய்து அசத்தியுள்ளனர். முன்னதாக சந்திரமுகி புடவை, சாமுத்திரிகா புடவை என பல புடவைகள் பிரபலமாகி வந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் புடவையும் இடம் பிடித்துள்ளது.