ஓட்டலுக்கு சாப்பிட சென்றவர்கள் சாம்பாரில் கிடந்த கரப்பான்பூச்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலை ராஜபாளையத்தில் வசித்து வருபவர் கேசவன். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்றுமுன்தினம் மதியம் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்கள் வாங்கிய சாம்பாரில் கரப்பான்பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே இது குறித்து ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை.
இதனை அடுத்து கேசவன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஓட்டலில் சோதனை செய்து பார்த்தனர். மேலும் கரப்பான் பூச்சி விழுந்த சாம்பார் மாதிரியை எடுத்து ஆய்வு செய்ய அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து ஆய்வு முடிவு வந்த பிறகு சட்டப்படி ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.