Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாம்பியனான இந்தியா… அபராதம் விதித்து ஷாக் கொடுத்த ஐசிசி …!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் தாமதமாகப் பந்து வீசியதற்காக இந்திய அணிக்குத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி நேற்று மவுண்ட் மௌங்கனுய் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா விளங்கினார். அவர் 61 ரன்கள் எடுத்திருந்த போது பின்னங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். இதனால், இந்திய பந்துவீச்சின்போது அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் கேப்டனாகச் செயல்பட்டார்.

இதில், 164 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

இதனிடையே, இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இந்திய அணி ஒரு ஓவர் குறைவாக வீசியது தெரியவந்தது. இதனால், ஐசிசியின் விதிமுறைப்படி இந்திய வீரர்கள் அனைவருக்கும் ஆட்டத்திலிருந்து 20 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தாமதமாகப் பந்து வீசியதற்காக இந்திய அணிக்குத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் தவறு நடந்ததை ஒப்புக்கொண்டு, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அபராதத்தை ஏற்றுக்கொண்டதால், இந்திய அணியிடம் ஐசிசி இது குறித்து விசாரணை நடத்தவில்லை.

முன்னதாக, நான்காவது டி20 போட்டியிலும் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்றது. அப்போட்டியிலும் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியதால் வீரர்கள் அனைவருக்கும் 40 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ஹாமில்டனில் தொடங்கவுள்ளது.

Categories

Tech |